துஷ்யந்த் சரவணராஜ் காதல் கவிதைகள்



கவிதைப் பிரியர்களுக்கு கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தப் பக்கத்தில், கவிஞர் நமக்கு காதல் சுவையை அள்ளிக் கொடுத்துள்ளார். மலர்களில் தேனைச் சுவைத்து மயங்கிக் கிடக்கும் வண்டாக என்னை இவரது கவிதைகள் காதல் மயக்கத்தில் ஆழ்த்திவிட்டன. ஏராளமான கவிதைகளை புத்தகங்களாக வெளியிட்டுள்ள கவிஞர் ஒவ்வொரு படைப்பிலும் தன்னை மிகச் சிறந்த கவிஞன் என நிரூபித்துள்ளார். என் அன்புத் தம்பி துஷ்யந்த் சரவணராஜ் அவர்களின் கவிதைகளை புதிய சிற்பியில் வெளியிடுவதில் நான் மிகுந்த பெருமையடைகிறேன். 

    `                                                                                                            - எஸ்பி.சரவணன்





உன்னைத் 
தீண்டும் வரை மழை!
தீண்டியபின் 
தீர்த்தம்!

💘

கரையில்
உன் பெயரெழுதிக்
கடல் நீரைக்
குடிநீராக்கச் சொல்கிறது
காதல்!

💘

குடை விரித்துக்
காத்திருக்கிறது
சாலை!
வாயேன்...
தோளுரச நடந்து
தூரங்களைத்
தொலைப்போம்!

💘

சொன்னால் 
சொன்ன நேரத்திற்கு வராதே!
என்னை காக்க வைத்ததற்காகக்
கெஞ்சிக் கெஞ்சி 
கொஞ்சிக் கொஞ்சி
நீ கேட்கும் மன்னிப்பு
அத்தனை 
அழகானது!

💘

உன் 
பொன் முதுகில்
புரண்டு புரண்டு
சந்தன மல்லியாகிக் கிடக்கிறது
சாதாரண மல்லி!
நீயோ
நாணத்தால்
பல்லில் கடித்துப்
பவள மல்லியாக்குகிறாய்!

💘

உன்
வருகைக்காகக்
காத்திருக்கிறேன்
வாகை நெற்றுகள்
வாசித்துக் காட்டுகின்றன
உன் கொலுசுப் பாடலை!

💘

எனக்கு 
சமைப்பதெற்கெல்லாம்
சிரமப்படாதே!
சாதம் மட்டும் 
வை!
தொட்டுக்கொள்ள 
நீ போதும்!

💘

உன் 
விழிக்குளத்தில்
வீழ்ந்து தொலைந்தவன்
மொழிக்கடலில் 
மீண்டெழுகிறேன்! 
கவிதையின்
கரம்பற்றி!

💘

உன் 
பெயரெழுதப்பட்ட
புத்தகத்தில்
தேனருந்திச் செல்கின்றன
பட்டாம்பூச்சிகள்!

💘

பாற்கடலைப்
பார்க்க வேண்டுமென்று
அடம்பிடிக்கிறாள் மகள்!
உன் 
பாதம் பட்ட கடலைக் 
காட்டுவதன்றி
வேறென்ன செய்வேன் நான்!

💘

கொஞ்சம் 
கூச்சமாய்த்தான் இருக்கிறது
உன்னைப் பார்த்து 
எழுதிய கவிதைகளுக்கீழே
என் பெயரைப் போட்டுக்கொள்ள!

💘

இப்பொழுதுதான் பார்க்கிறேன்
குங்குமப் பூவொன்று
குங்குமம் சூடும்
பேரழகை!

💘

உன் இடை
பிரம்மன்
வரைந்தனுப்பிய
வறுமைக்கோடு!

💘

காக்க வைத்ததன்
கோபத்தைப் போக்க
முத்த மொழியில் 
பேசத் தொடங்குகிறாய்...
நாளை முதல்
சீக்கிரம் வந்து
காத்திருக்க வேண்டுமென 
கணக்குப் போடுகிறது
காதல் மனது! 

💘

நீ 
தேவதை!

நீ 
இரவல் தந்த 
சிறகால்தான்
பறந்துகொண்டிருக்கிறேன்
நான்!

💘

கோழி இறகால்
காது குடைவதுபோல்
உள்ளுக்குள்
குறுகுறுப்பூட்டுகிறது
உன் ஓரப்பார்வை!

💘

படிக்காத மாணவனுக்குப் 
பார்த்தெழுதக் கிடைத்த 
விடைத்தாள் போல்
என்னருகில் நீ
உன்னைப்
பார்த்துப் பார்த்தே 
எழுதத் தொடங்குகிறேன் 
என் கவிதைகளை!

💘

வியர்வையில்
வழிந்தோடும்
உன் நெற்றிக் குங்குமமே
இந்த
ஏழைப் புலவனின் 
செம்புலப் பெயல்நீர்!

💘

நான்
தமிழ், தமிழ், தமிழ் என்று
திரும்பத் திரும்பச்
சொன்னால்தான்
அமிழ்து அமிழ்து
என்று ஆகிறது
நீ
ஒருதடவை
தமிழ் என்றாலே
அமிழ்தாகி விடுகிறது



Previous
Next Post »