சாம்ராஜ் யாகப்பன் கவிதைகள்



ஏராளமான விருதுகளையும், எண்ணற்ற சினிமாப் பாடல்களையும், கிராமியப் பாடல்களையும் எழுதியுள்ள முனைவர் சாம்ராஜ் யாகப்பன் அவர்கள் தற்போது நமது புதிய சிற்பிக்காக கவிதைகள் எழுதி சிறப்பித்துள்ளார். கவிதை நடையை மென்மையாக ஆரம்பித்து,  முடிவில் திருப்புமுனையான கருத்துகளுடன் கவிதையை சுவைபட  முடிப்பதில் வல்லவர். என் அன்புத்தம்பி கவிஞர் முனைவர் சாம்ராஜ் யாகப்பன் அவர்களின் படைப்புகளை வாசித்து மகிழுங்கள்!
                                                                                                                                   - எஸ்பி. சரவணன்






நீங்கள் கேட்டவை

மெல்லப் பேசு
மென்மையாய் நட....

உள்ளதைச் சொல் 
உண்மையாய் இரு...

சிரிக்கப் பழகு 
சிந்தனையில் மூழ்கு....

பொறுத்துப் போ
பொங்கிட வேண்டாம்....

தனிமைதான் தவம்
தலைக்கனம் விரட்டு....

ஏளனம் வரும்
எதையும் தாங்கிக்கொள்....

பணமிருந்தாலும்
பழையதை நினை.....

சோதனைகள் வரும்
சோதனை செய்.....

கடன்பெற வேண்டாம்
கனவுகள் சிதையும்....

அடித்திட வந்தால்
இருகன்னம் காட்டு....

கோபத்தைச் சபி
கொலைசெய்யத் தூண்டும்....

காமத்தைக் கட்டிவை 
கல்லறைக்கு அனுப்பும்....

மதுவோடு இருந்தால்
மானத்தைக் கெடுக்கும்....

அளவோடு உன்
ஆயுள் சுரக்கும்...

பிறர் பார்க்க வாழ்ந்தால்
பிச்சை எடுக்க நேரும்....

ஊரோடு ஒத்துப்போ
உயர்வைக் கொடுக்கும்...

மனம் போன போக்கு
மரியாதை குறைக்கும்....

மனம் விட்டுப் பேசு
மனிதனாய் மதிக்கும்....

கோவிலுக்குப் போ
கோமகனாக்கும்....

அறம் செயப் பழகு
ஆண்டவனாக்கும்....

இப்படி எழுதப்பட்டயாவும்
செயல்பட முடியாமல்
அகால மரணமடைந்து கிடக்கிறது
அறிவுரைகள்......



கடவுளிடம் ஒரு வார்த்தை

உலகைப் படைத்து
அழகெனக் கண்ட கடவுளுக்கு...

ஊனங்களாகிறோம்
ஊமைகளாகிறோம்

பார்வைகள் இழக்கிறோம்
பாடுகள் சுமக்கிறோம்

வறுமையிலிருக்கிறோம்
வலிகளால் துடிக்கிறோம்

பிச்சை எடுக்கிறோம்
பித்துக்கொண்டலைகிறோம்

ஆசையிலிருக்கிறோம்
ஆயுளைக் குறைக்கிறோம்

குடும்பத்தைக் கெடுக்கிறோம்
குறிவைத்து அடிக்கிறோம்

சாதிகளால் சாகிறோம்
சாமிகளாய் வாழ்கிறோம்

கருவறையில் கற்பழித்து 
கடவுளை மறக்கிறோம்

எல்லாம் 
ஏமாற்றம்

அடுக்கடுக்காய்ப்
போராட்டம்

இது 
பரம்பரை வியாதி...

இருந்தும் 
ஏவாளின் பேரனாய்
கனிவுமிகு கடவுளிடம்
ஒரு வார்த்தை....

அந்த மரத்தை 
அங்கே 
வைக்காமல் இருந்திருக்கலாம்....
Previous
Next Post »