கவிஞர் வர்தினி ஜெயக்குமார் கவிதைகள்





கவிஞர் வர்தினி ஜெயக்குமார் அவர்கள் மனிதநேயமிக்க கனிவுள்ளம் மிக்க வழக்கறிஞர். யூடியூப், போட்காஸ்ட், பிளாக்கர் என பல்வேறு சமூக வலைதளங்களில் கவிதைகள் எழுதுதல், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் வாசித்தல் என தீவிரமாக செயல்பட்டு வருபவர். நமது புதிய சிற்பியில் அவர் படைப்புகளை வெளியிடுவதில் பெருமை அடைகிறோம்.


வானமே எல்லை!

நொடி நேரம் நோயில் நோகாமல்
நெடுவாழ்வு நிலைத்ததில்லை!

கனவிலேனும் கிலியடையாதவர்
காசினியில் காணுதற்கில்லை!

பித்தரோ சித்தரோ பாரினில்
பசியறியாதவர் யாருமில்லை!

கணமேனும் கண்ணீர் விடாத
கல்மனத்து உயிர்களில்லை!

தோல்விகளில் துவளாதே
நோய்களைப் பழிக்காதே!

தடைகளைத் தடுத்துயர்ந்த
தாவரம்பார் தரணியெங்கும்!

இழப்புக்களை சபிக்காதே
வீழ்ச்சிகளை மறுக்காதே

ஓயாமல் எரிந்து கொண்டு
ஒளியூட்டும் ஆதவன்பார்!

குறைகளைத் தூற்றிடிடாதே
உறவுகளை வெறுத்திடாதே

அடங்காத ஊக்கத்தோடு
அகிலம் சூழும் அலைகடல்பார்!

ஏளனங்களை எதிர்த்திடாதே
கோபங்களில் கறைந்திடாதே

வெற்றி வாய்ப்பின் சிறகுக்கு
வானமே என்றும் எல்லைப்பார்! 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


இரவு ஒரு உண்மை விளம்பி!


கண்மூடி மண்மூடும் வரை
காணாததையும் காணச் செய்வான்

பேச மறந்ததையும் மறைத்ததையும்
உறக்கம் எனும் போர்வையில்
உரக்கச் சொல்வான்

ஒளிய இடம் தராமல்
ஒட்டிக் கொண்டு திரிவான்

மூடிய வழிகளுக்குள்
மூடாக் கதவுகளை
திறந்தே வைத்திருப்பான்

போலிகளையும் பொய்மைகளையும்
போட்டோக்ரேபி திறனால்
பளிச்சிடச் செய்வான்!

நீட்டிய கால்களுக்கு
நீண்ட நடையையும் நடப்பையும்
நிகண்டு சொல்வான்!

செதுக்கிவிட்டு சாகா உணர்வு தந்து
செத்து செத்து உயிர்த்தெழும்
சாகசமும் பயிற்றுவிப்பான்!

இரவு ஒரு உண்மை விளம்பி!


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


சிற்றுண்டி!


இரவு உபவாசத்தை
இனிதே முடிக்க
காத்திருந்தது 
வயிறு!

பிரிந்த காதலியை 
பிண்ணிப் பிணைந்து
பாசத்தோடு அணைத்தன
கைகள்!

மெல்ல உள்வாங்கி
முத்தமிட்டு வழியனுப்பியது
இதழ்கள்!

பலசுவையில் பலகாரமாய் சிலருக்கு
பழையசோறும் பச்சைமிளகயுமாய் சிலருக்கு
பிரசாதத்தின் தொண்ணையில் சிலருக்கு
பானையின் பச்சைத் தண்ணீரில் சிலருக்கு
பரபரப்பு அலுவலுக்கு இடையே சிலருக்கு
பலநாளுக்கு ஒருமுறை பரிசாய் சிலருக்கு

உடற்பயிற்சி மறந்தவனுக்கு
ஆண்டியின் அளவில்
உழைப்பில் வியர்த்தவனுக்கு
அரசனின் அளவில்
அண்ணாடம் காய்ச்சிக்கோ
அவ்வப்போது கனவில்
அடுக்களை அரசிகளுக்கோ
அரைநாள் முடிவில்

மருந்தாய் உணவிருந்தால்
விருந்தாய் சிற்றுண்டி
வாழ்நாள் முழுதும்!
விரும்பியதெல்லாம் உண்டால்
மருந்தே உணவாய்
வாழ்வில் மிஞ்சும்!


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


நான் கற்ற மொழிகளெல்லாம் 
நையான்டி செய்தன
மையலில் உன்னருகில்
மெய்யும் மொழியும்
மறந்து நிற்கையில்

பசலை நோயில்
பசி மறந்தேன்
முத்தப்பந்திக்கு அழைத்திடு
முந்திக்கொண்டு வருகிறேன்

முதுகில் நுழைந்து 
முகத்தை அடையும்
லேசர் கதிர்களாய்
சில நொடிப்பார்வை

முகத்தை பார்த்து
மூளையை படமெடுக்கும்
எக்ஸ்ரே கதிர்களாய்
சில நொடிப்பார்வை

காயமாய் சிலநொடிப்பார்வை
களிம்பாய் சிலநொடிப்பார்வை

உன் பார்வையின்
பின் விளைவுகளை
நான் பார்த்துக்கொள்கிறேன்
 
நீ 
பார்ப்பதை மட்டும் நிறுத்தடாதே!
பட்டென்று உயிர் போனாலும் போகும்!


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


கவி!


ஏக்கத்தோடு காத்திருந்த
எழுத்துக்களை எல்லாம்
எத்தனித்து ஒன்றாக்கி

சுக்கலாய் சிதறிக் கிடந்த 
சொற்களெனும் சீட்டுக்கட்டை
சீரமைத்து செப்பும்படி செய்து

இன்றியமையாததென்ற இறுமாப்போடு
இளக்காரமான இலக்கணத்தை
இழுத்து பிடித்து கட்டி வைத்து

மெல்ல ஊர்ந்திடும் மூளையதின்
மெத்தனத்தை முடித்து வைக்க
முதுகில் தட்டி முடுக்கி விட்டு

வானத்து மலராய் விரிந்திருக்கும்
வார்த்தைகளை வாரிச்சுருட்டி
வரிகளாக்க வரிசைப்படுத்தி

நிமிடங்கள் நிலைமை உணர்ந்திட
நாட்களும் நிலாவமும் நையாண்டிக்க
நேரத்தின் நக்கலை நகைப்புடன் கடந்து

பெற்றவரை பெருமைபடுத்த
பண்புகளை பரைசாற்றும்
பெருங்கருத்து உள்ளடக்கி

மடை வெள்ளமான சிந்தனைக்கு
கடிவாளமாய் வரப்புகளமைத்து
கடை வரை காயாமற் சேர்த்து

பொருளோ பொன்னோ வேண்டா
வரமாய் கவியொன்றே வேண்டும்
அருந்தவமான எழுத்தெனும் தொழில்!!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


புத்தகம்!


பச்சை பிள்ளையின் பால்மணம் வீசும்
புதிதாய் வாங்கிய புத்தகத்தின் வாசம்
பழம்புத்தகத்தில் படிந்தருக்கும் தூசும்
படித்த மக்களின் பெருமைகள் பேசும்

பார்த்தவுடன் பகிரும் பார்வுடளெல்லாம்
படித்தவையா புரிந்தவையா அய்யமே!
நாளெல்லாம் ஒலிக்கும் நேரலைகள்
நச்சென்ற நாளிதழிடம் தோற்று போகும்!

அலெக்ஸா சிரியன் அழகு குரலெல்லாம்
அகமுடையாளின் அனுங்கலுக்கீடாகுமா!
ஆயிரம் மேப்புகள் அடுக்கி வைத்தாலும்
ஆட்டோகாரர்களின் ஆற்றலுக்கீடாகுமா!

பணக்கார வீட்டு பல்சுவை விருந்தாய்
பகட்டாக பலசேதி பரப்பும் கைபேசி
பத்திய உணவாய் பாத்திரமறிந்து பகரும்
புத்தக போதனைக்கு இணையாகுமா யோசி!


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


பௌர்ணமி


கணக்காளன் கோடியின் கடைசி சுழியமாய்
காதலனுக்கு காதலியின் முழுமதி முகமாய்
பசி முற்றியனுக்கு முழுத்தட்டு சோறாய்
பலநாள் யாசகருக்கு நிரம்பிய நாணயமாய்

பிள்ளைக்கு தாயவளின் வெண்பூ இட்லியாய்
பெண்ணவளுக்கு மோதிரமாய் வளையலாய்
தடகளக்காரனுக்கு ஒலிம்பிக்கின் வளையமாய்
தவறவிட்டவனுக்கு தன் வெள்ளிப் பதக்கமாய்

கேசவனுக்கு தளும்பும் வெண்ணைத் தாழியாய்
கேட்டவன் பார்த்தனுக்கு காக்கும் கேடையமாய்
எட்டாத உயரத்தில் எத்தனை முகங்கொண்டாய்
எட்டித்தொடுகிறேன் மாதந்தோறும் கடலலையாய்


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


நாக்கு!!


பல்லரனது பாதுகாப்பில்
பாசாங்கு படைக்கலமாய்
பச்சோந்தி நாவுடையோர்
பக்கத்திற்கு ஒருவரேனும்
பார்முழுதும் படர்ந்துள்ளார்

உழுவலன்பில் உள்ளார்ப்போல்
உன்னை வெல்ல யாரென்பார்
உன்தலை மறைந்தபின்போ
உருண்டிடும் நாக்கதனால்
உடலுநர் உருவம் கொள்வார்

நல்லகம் முகத்திலே அதில்
நல்லிதயம் நாவிலென்பார்
நுனிநாக்கில் அமுதிருப்பினும்
நஞ்சிருக்கும் அடிநாக்கில்
நரம்பில்லா உறுப்பல்லவா

வெகுசிலர் இருப்பதுண்டு
வாய்ச்சொல்லில் வீரராய்
வையத்தின் விதிகள்மறந்தே
வாய்மையே விளம்பிடுவார்
வெள்ளந்தி மனிதரவர்

தேசமசையும் நாவசைவில்
தடித்துபோயின் கழுவுமேறும்
திரியும் பாம்பின் தவளையாய்
தேவையிங்கு விசமா வெல்லமா
தீமை நன்மையும் தன்நாவிலேயே!
Previous
Next Post »